4. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 3
*************************************************
கொஞ்சம்கூடத் துன்பம் கலக்காத முழுஇன்பத்தையே மனிதன் எவனும் விரும்புகிறான் என்பது திண்ணம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவ்வித சுகத்தை, இன்பத்தை, இதுவரை எந்த மனிதனும் அடையவில்லை. அதாவது, பஞ்சேந்திரியங்களைத் திருப்தி செய்யும் முறையால் அதை எவனும் அடையவில்லை. அம்முறையில், இதுவரை உலகம் உழைத்து முன்னேறியதால் முழுச்சுகம் அடையைப்படவில்லை என்பது நன்கு விளங்கி விட்டது.
ஆனால் அப்படிப்பட்ட சுகத்தை அடைய முடியாதா? முடியும். துன்பக் கலப்பு இல்லாமலும், எப்போதும் நீங்காததுமாகிய (முழுச் சுகமாகிய) பெரிய இன்பம் ஒன்றை அடைய வேண்டும் என்று உயிர்கள் நினைப்பது தப்பு அல்ல!
சுக இச்சை தப்பு அல்ல! அது அடையப்பட வேண்டியதே! அதுவே புருஷார்த்தம்!! ஆனால், அதற்கு இந்நாள் வரையில் மனிதர்கள் வழிவகுத்து நடத்தி வரும் திட்டம்தான் தப்பாக உள்ளது. அதனால்தான் மனிதன் எவ்வளவுதான் உழைத்தாலும், அந்தப் பூரண சுகத்தை அடையவில்லை.
இவ்விதம் சகல சீவர்களும் விரும்பும் பரிபூரண சுகத்திற்கு அழைத்துச் செல்லும் மார்க்கங்களே உலகில் தோன்றியுள்ள மதங்களாம். "மதம்" என்றால் (மதிக்கப்பட்ட) கொள்கைகள் அல்லது வழிகள் என்று பொருள்படும். எந்த வழியில் முயன்றால் பூரண சுகத்தை அடையலாம் என்பதைக் காட்டிக் கொடுப்பதே மதங்களின் வேலை. ஆனால், தற்பொழுது, பற்பல மதங்கள், தத்தம் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி வந்தும்கூட, மனிதன் மனிதாபிமானம் என்ற ஒரு வெறி மயக்கத்தாலும், மதங்களின் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத அறியாமையினாலும், எம்மதத்தை ஒழுகுபவனாய் இருந்தாலும், அவன் அந்தப் பரிபூரண சுகநிலையைப் போய் அடையாமல், இடைவழியிலேயே தடுக்கப்பட்டு விடுகிறான்.
**** தொடரும்
No comments:
Post a Comment