Thursday, December 13, 2007

3. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 2

3. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 2
************************************************

கண்ணுக்கு இனியதைக் கண்டதும் மனிதன் ஆனந்தம் அடைகிறான். அந்தக் காட்சி மறைந்ததும் துக்கம் அடைகிறான். காதுக்கினிய பாடலையோ, பேச்சையோ கேட்கும்போது ஆனந்தமும், அது நீங்கியவுடன் துக்கத்தையும் அடைகிறான். காட்சி, கேள்வி இவைகளைப் போலவே தொடுவுணர்வு (ஸ்பரிசம்), நுகர்வு ஆகியவைகளையும் சுக வடிவாகவும், துக்க வடிவாகவும் மனிதன் அனுபவிக்கிறான். மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் மனிதனுக்குச் சுகத்தைக் கூட்டி வைப்பதாகத் தோன்றினாலும், அவைகள் எப்போதும் இடைவிடாமல் சுகம் தருவது இல்லையே!

"சினிமா, கணினி" போன்ற காட்சிகளை அளவுக்கு மீறிப் பார்க்க, கண் எரிச்சலுண்டாகிக் கெட்டுப்போய் கண் நோய் உண்டாகிறது. மற்றவிதக் கண்காட்சிகளும், எப்போதும் கண்டுகொண்டிருக்க முடியாமல், ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றன. காதின் இனிமையும் இப்படித்தான். எவ்வளவு நேரம்தான் இசை கேட்கமுடியும்? இசை முடிந்துவிடும்; அல்லது இந்த மனிதன் அவசர வேலையாக அங்கிருந்து போகவேண்டி இருக்கும். இவ்வாறே, காதால் அனுபவிக்கப்படும் சுகத்துக்கும் முடிவு உண்டாகிறது. மூக்கின் வாசனையும் அப்படியே. அதிகமான மணத்தை நுகர்ந்தால் தலைவலியோ, மூக்கில் இரத்தமோ வந்துவிடும். அந்த வாசனை தந்த பொருட்களும் விரைவில் வாசனையை இழந்துவிடும். ருசி(taste)யும் அப்படியே. நாக்கால் ருசித்து எவ்வளவு சாப்பிட முடியும்? வயிற்றில் இடம் இருக்கும்வரை மட்டும்தான். அதிக ருசி இருந்தால் தெவிட்டல் வந்துவிடும். ஆகவே, ருசியும் நீடித்த சுகம் தருவது இல்லை. தொடுவுணர்வும் அப்படியே.

பஞ்சேந்திரியங்களால் நாம் எந்த சுகத்தையும் நீடித்து அனுபவிக்க முடியாது. அளவுக்கு மீறினால், சுகத்துக்குப் பதிலாக துக்கத்தைத் தந்துவிடும். எனவே, மனிதன் தேடும் சுகமானது அவனுக்குப் பூரணமாக, நிரந்தரமாகக் கிடைப்பதில்லை.
இதுவே இந்த ஆராய்ச்சியின் பயன்.

***** தொடரும்

No comments: