2. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 1
************************************************
உலகம் அறிவால் முன்னேறுகிறது. அறிவின் விளக்கமே இந்த உலகில் காணப்படும் சிறப்புகள்.
உலகம் எதை நோக்கி முன்னேறுகிறது? உலத்திற்கு என்ன வேண்டும்?
ஊன்றிக் கவனிக்க மனுக் குலம் அனைத்துமே சுகத்தை அடையவே பாடுபடுகின்றனர் என்பது தெரியவரும். எறும்பு முதல் அரசாள்பவன்வரை அனைவருமே உழைக்கின்றனர். எதற்காக? சுகத்துக்காகவேதான்.
ஒவ்வொருவருக்கும், தற்போது தனக்கிருக்கும் நிலையைவிட சுகமான நிலை வேண்டுமென்ற தணியாத ஆவல் இருக்கிறது. அந்த ஆவலே இம்மாதிரியான உழைப்புக்குக் காரணம். இது தப்பல்ல; நல்லதே! மனிதனுக்கு மென்மேலும் சுகமாயிருக்க விருப்பம் உண்டாவதால், அவனுக்குத் தற்போது சுகமானது முழுவதுமாகக் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. ஒருவன் மிகப் பாடுபட்டு உழைத்து, வாழ்வுக்கு வேண்டிய உணவு, வீடு, மனைவி, மக்கள், உத்தியோகம் போன்ற பல சுக சாதனங்களைப் பெருக்கிக்கொள்ளுகின்றான். ஏன் என்றால், அவைகளிலிருந்து தனக்குச் சுகம் உண்டாகும் என்பதற்காகவே அப்படிச் செய்கிறான்.
இவ்வாறு, மனிதன் தேடும் சுகமானது, அவனால் அனுபவிக்கப்படுகிறது. ஆனால், அது நீடித்து நிற்பதில்லை. கொஞ்ச நேரமே சுகம்போல் தோன்றிப் பிறகு அது விலகிவிடுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்வில் சுகம் அனுபவிக்கும் பற்பல வழிகளையும் ஆராய்ந்தால், பொதுவான ஒரு முடிவுக்கு வரலாம்.
அதாவது, மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐந்து பொறிகளால் அனுபவிக்கப்படுவதே, இப்போது மனிதன் கண்டுள்ள சுகம். இந்த ஐந்து கருவிகளுக்கும் வேண்டியதைத் தேடுவதே, இன்றுவரை மனித குலத்தின் பேருழைப்பாக இருந்து வருகிறது.
***** தொடரும்
No comments:
Post a Comment