Thursday, December 13, 2007

6. எது சுகம்? - 1

6. எது சுகம்? - 1
****************
மனிதா! நீ சுகத்தை அடைய விரும்புகிறாயா? நீ சுகத்தை அடைய முயலுகிறாயா? அல்லது , அதற்குத் தகுந்த ஒரு வழி வேண்டுமென ஆசைப்படுகிறாயா? அப்படியானால், நீயே பாக்கியவான்! நீ வாழ்வாய்! வா; வா. இந்த வழியை ஆராய்ந்து பார். இந்த வழியில் பூரணமான சுகத்தை அடைய முடியும் என்று நம்பிக்கை பிறக்கிறதா? எனப் பார். உனக்குச் சரி எனப் பட்டால் கடைப்பிடி; விடாது உழை; பயனைப் பரிபூரணமாக அடை.

சுகம் என்றால் என்ன? சொல். எது சுகம்? இதுவரை நீ அனுபவித்தவைகளில் எது சுகம்? பஞ்சேந்திரியங்களின் மூலம் உனக்குக் கிட்டும் நல்ல அனுபவங்களையே "சுகம்" என்கிறாய். பிடிக்காதவற்றைத் "துக்கம்" என்கிறாய். அப்படித்தானே?

இவ்வாறு நீ சுக - துக்கத்தைப் பற்றி கொண்டுள்ள கொள்கை தவறானது.
ஆகையால்தான், அந்தச் சுகத்தை அடையவும், துக்கத்தை விலக்கவும் (உன் கொள்கையின்படி), நீ முயன்ற வழிகள் எல்லாம் தவறாகிவிட்டன. வழி தவறானதால், துக்கக் கலப்பு இல்லாத சுகத்தை உன்னால் அடைய முடியவில்லை.


உன் கருத்துப்படி, பஞ்சேந்திரியங்களின் அனுபவத்திற்கு வேண்டிய பொருட்கள் கிடைத்திருக்கும்போது சுகமும், இல்லாதபோது துக்கமும் அல்லவா கிடைத்திருக்க வேண்டும். நீ தூங்கும்போது சுகம் அனுபவிக்கிறாய். அங்கு
பஞ்சேந்திரியங்களின் அனுபவம் ஒன்றுமில்லையே? ஆனால், கனவற்ற தூக்கம் எல்லோருக்கும் சுகமாகவே உள்ளது; பஞ்சேந்திரியங்கள் வேலை செய்யாதபோது துக்கம் அல்லவா இருக்கவேண்டும்? அப்படி இல்லையே? அதற்கு மாறாக, உடலுணர்வு (அல்லது பஞ்சேந்திரிய அனுபவம்) இல்லாதபோது சுகமாக அல்லவா இருக்கிறது! இதற்கு நீ என்ன சொல்லுவாய்? ஆகவே, பஞ்சேந்திரியங்களின் உதவி இல்லாமலே சுகம் அனுபவிக்க முடியும் என்பதை நீ ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.


தொடரும்.....

No comments: